குமரியில் பரவலாக மழை:அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 24.8 மி.மீ. பதிவு


குமரியில் பரவலாக மழை:அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 24.8 மி.மீ. பதிவு
x

குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 24.8 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 24.8 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

பரவலாக மழை

தமிழகத்தில் பல இடங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வந்த நிலையில் குமரி மாவட்டத்திலும் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று காலையிலும் சூரியனே தெரியாத வகையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. அதே சமயத்தில் மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பகலிலும் பலத்த மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை பொறுத்த வரை காலை 7 மணிக்கு பிறகு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை வெகு நேரம் வரை நீடித்தது.

அணைகளுக்கு நீர்வரத்து

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 24.8 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல நாகர்கோவில்-3.2, சிற்றார் 1-20.2, பாலமோர்-15.6, திற்பரப்பு-15, கொட்டாரம்-13.2, கோழிப்போர்விளை-4.8, அடையாமடை-5.2, முள்ளங்கினாவிளை-7.6, சுருளகோடு-6 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 660 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 569 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 373 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 310 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story