குமரியில் பரவலாக மழை நீடிப்பு
நாகர்கோவில்,
குமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சுருளோட்டில் 53.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே உள்ளது. மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலையில் வெயில் அடித்த நிலையில் மதியத்துக்கு பிறகு ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னிமார், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. மலையோர மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
சுருளோட்டில் 53.6 மி.மீ. பதிவு
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக சுருளோட்டில் 53.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 16.2, பெருஞ்சாணி- 43, சிற்றாறு 1- 5, பூதப்பாண்டி 17.6, கன்னிமார்-12.8, நாகர்கோவில்- 3, தக்கலை- 2.2, பாலமோர் 35.6, முள்ளங்கினாவிளை- 52, அடையாமடை 2.2, முக்கடல்- 11.6 என பதிவாகி இருந்தது.
திற்பரப்பு பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. கோைட விடுமுறையையொட்டி திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
அணைகளுக்கு நீர்வரத்து
பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 220 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடி 255 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.