மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை- மேட்டுப்பட்டியில் 168 மி.மீ. கொட்டியது


மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் மேட்டுப்பட்டியில் 168 மி.மீ. கொட்டியது.

மதுரை

மேலூர்

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் மேட்டுப்பட்டியில் 168 மி.மீ. கொட்டியது.

பரவலாக மழை

மதுரையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. பிற்பகலில் வானம் மேகமூட்டமாக மாறி, மாலை நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. மாவட்டத்தில் பரவலாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.

மதுரை

மதுைர மாநகரிலும் பலத்த மழையாக கொட்டியது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது.

மாட்டுத்தாவணி அருகே உள்ள டி.எம்.நகர் குடியிருப்பு பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் மிகவும் அவதிப்பட்டார்கள். மதுரை புதூர் குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பு பகுதிகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.

கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வேகமாக நிரம்பி வருகின்றன. சில கண்மாய்கள் நிரம்பி மறுகாலும் பாய்கின்றன. அதிகபட்சமாக மேட்டுப்பட்டியில் 168 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலூர்

குறிப்பாக மேலூர் பகுதியில் நேற்று முன்தினம் மழை வெளுத்து வாங்கியது. மழையால் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் ரேவதி மற்றும் பஞ்சு ஆகியோரின் ஓட்டு வீடுகளும், பதினெட்டாங்குடியை சேர்ந்த திருமணி முத்து என்பவரது ஓட்டு வீடும் மழையால் இடிந்து சேதமடைந்தன. மேலூர் தாசில்தார் சரவண பெருமாள் உத்தரவின் பேரில் நாவினிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டார்.

அழகர்மலையில் கன மழை பெய்ததால், தண்ணீர் பெருக்கெடுத்து மலை அடிவாரத்தில் காட்டாற்று ஓடை வழியாக பாய்ந்து கிடாரிப்பட்டியில் உள்ள கூட்டுறவு வங்கி, ரேஷன் கடை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சூழ்ந்தது. மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் காட்டாறு வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் கிடாரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா மதிவாணன் மற்றும் வருவாய்த்துறையினர் வெள்ள நீரை வாய்க்கால் வழியாக வடிய ஏற்பாடு செய்தனர்.

மழை விவரம்

மதுரை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டர்):-

மதுரை 8.6, சாத்தையாறு-33, மேட்டுப்பட்டி 168, கல்லந்திரி 66.4, திட்டம்பட்டி-5.4, புளிப்பட்டி-85.6, மேலூர்-34, தனியாமங்கலம்-38, எழுமலை-10, பெரியபட்டி-90.4.


Related Tags :
Next Story