வத்தலக்குண்டு அருகே தொழிலாளியை தீர்த்துக்கட்டிய மனைவி கைது
வத்தலக்குண்டு அருகே தொழிலாளியை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். மதுபோதையில் கொடுமைப்படுத்தியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
வத்தலக்குண்டு அருகே தொழிலாளியை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். மதுபோதையில் கொடுமைப்படுத்தியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொழிலாளி கொலை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள வடக்கு விராலிப்பட்டியை சேர்ந்தவர் வீரய்யா (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அபிராமி (40) என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீரய்யாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அபிராமி தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வீரய்யாவை சரமாரியாக குத்தினார். இதில், நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவி கைது
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமியை நேற்று கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது கணவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். மேலும் மதுபோதையில் அடிக்கடி என்னிடம் தகராறு செய்து வந்தார்.
பரபரப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வந்த வீரய்யா, என்னிடம் தகராறு செய்தார். மேலும் என்னை தாக்கி கொடுமைப்படுத்தினார். ஒருகட்டத்தில் எனக்கு தீராத ஆத்திரம் ஏற்பட்டது.
இதனால் வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து, எனது கணவரின் வயிற்றில் சரமாரியாக குத்தினேன். அப்போது கத்தி எதிர்பாராதவிதமாக கணவரின் மர்ம உறுப்பிலும் பட்டது. இதில், மர்ம உறுப்பில் காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் எனது கணவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.