கணவரை கொன்று உடலை வாழைத்தோப்பில் புதைத்த மனைவி கைது


கணவரை கொன்று உடலை வாழைத்தோப்பில் புதைத்த மனைவி கைது
x

9 மாதங்களுக்கு முன்பு மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவரை கொன்று உடலை வாழைத்தோப்பில் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நடுவீரப்பட்டு அருகே உள்ள சத்திரம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). விவசாயி. இவருக்கு விஜயலட்சுமி (38) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜசேகர் கடந்த 9 மாதத்திற்கு முன்பு திடீரென மாயமானார்.

ஆனால் விஜயலட்சுமியோ தனது கணவர் வெளியூர் சென்று இருப்பதாக உறவினர்களிடம் கூறி வந்தார். இருப்பினும் சந்தேகமடைந்த உறவினர்கள், ராஜசேகர் மாயமான விவகாரத்தில் மர்மம் இருப்பதாக நடுவீரப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் விஜயலட்சுமியிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் தெரிவித்ததாவது:-

வாழைத்தோப்பில் உடல் புதைப்பு

எனக்கும், கணவரின் நண்பரான எஸ்.புதுக்குப்பத்தை சேர்ந்த மோகன்(33) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த ராஜசேகர், கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று ஆத்திரமடைந்த நான், இரும்பு கம்பியால் அடித்து ராஜசேகரை கொலை செய்தேன். பின்னர் கள்ளக்காதலன் மோகன் உதவியுடன் ராஜசேகரை வீட்டின் பின்புறம் உள்ள வாழைத்தோப்பில் குழி தோண்டி புதைத்து விட்டேன். இது பற்றி யாரிடமும் கூறாமல் எனது குழந்தைகள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் ராஜசேகர் வெளியூர் சென்று விட்டதாக நாடகமாடினேன். தற்போது போலீசில் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடல் தோண்டி எடுப்பு

அதன்அடிப்படையில் போலீசார் நேற்று முன்தினம் விஜயலட்சுமியை வாழை தோப்புக்கு அழைத்து சென்றபோது, அவர், ராஜசேகர் உடலை புதைத்த இடத்தை அடையாளம் காண்பித்தார்.

இதையடுத்து நேற்று மதியம் தாசில்தார் சிவகார்த்திகேயன், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ரகுபதி, பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலையில் ராஜசேகரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மதுவர்தன், செல்வகுமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் ராஜசேகர் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

மனைவி கைது

இதையடுத்து விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மோகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story