நகை-பணம் கேட்டதாக மனைவி புகார்; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
நகை-பணம் கேட்டதாக மனைவி புகார்; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முசிறி:
முசிறி காந்தி நகரை சேர்ந்த சோமசுந்தரத்தின் மகள் அபிநயா(வயது 30). இவருக்கும் திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் மனோஜ் என்ற பிரவீன்குமார் (32) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது அபிநயாவின் பெற்றோர் சீர்வரிசையாக 20 பவுன் நகையும், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களும் கொடுத்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் அந்த நகைகள் மற்றும் அபிநயா வங்கி கணக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை, அவரது கணவர் வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தனது பெற்றோரிடம் இருந்து நகை மற்றும் பணம் வாங்கி வருமாறு கூறி மனோஜ் என்ற பிரவீன் குமார், அவரது பெற்றோர் இளங்கோவன் (65), லதா (57) மற்றும் இளங்கோவனின் மகன் பிரதீப்குமார் ஆகியோர் தன்னிடம் தகராறு செய்து, வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அபிநயா புகார் அளித்தார். அதன்பேரில் மனோஜ் என்ற பிரவீன்குமார், இளங்கோவன், லதா, பிரதீப்குமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.