போலீஸ்காரர் மீது மனைவி பரபரப்பு புகார்


போலீஸ்காரர் மீது மனைவி பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 27 July 2023 12:02 AM IST (Updated: 28 July 2023 1:08 PM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீஸ்காரர் மீது, அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர்

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது. இதில் ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து திருப்தி பெறாத 10 மனுதாரர்கள் மற்றும் 15 பேர் என 25 பேரிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பந்தப்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுகளிடம் ஆலோசனைகளை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள புவனகிரி ரோடு வேதாந்தா நகரை சேர்ந்த ஒருவர் ஆம்பூர் சப்-டிவிஷனில் போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

குழந்தை பிறந்தது

கடந்த 2017-ம் ஆண்டு பெரியோர்கள் முன்னிலையில் எங்களுக்கு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 12 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. எனது கணவரின் உறவினர் ஒருவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளது. அந்த பிள்ளைகளை நாம் வளர்த்துக்கொள்ளலாம். இதனால் நமக்கு குழந்தைகள் வேண்டாம் என எனது கணவர் கூறினார். இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நான் கருவுற்றேன். ஆனால் கருவை கலைக்க சொல்லி எனது கணவர், மாமியார், கணவனின் சகோதரி, அவரது கணவர் உள்ளிட்டோர் என்னிடம் வற்புறுத்தி தொடர்ந்து தாக்கினர். பல்வேறு போராட்டத்துக்கு பிறகு எனக்கு பெண் குழந்தை பிறந்தது.

வரதட்சணை

குழந்தை பிறந்த பிறகு எனது கணவர் எங்களை பார்க்க வருவதில்லை. அவரை தொடர்பு கொண்டால் பணியின் காரணமாக வெளியூர் சென்றுள்ளதாகவும், பிறகு வருகிறேன் எனக் கூறி காலம் கடத்தி வந்தார். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அவரது வீட்டிற்கு சென்ற போது, எனது கணவர், என்னிடம் ரூ.5 லட்சம் பணம், நகை கொண்டு வந்தால் மட்டுமே வீட்டிற்குள் அனுமதிக்க முடியும் எனக்கூறி தாக்கி விரட்டி விட்டனர். இது குறித்து ஆம்பூர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story