தாளவாடி வனச்சரகத்தில் வனவிலங்குகளிடம் இருந்து பயிரை காக்க சூரியமின்வேலி அமைப்பு
தாளவாடி வனச்சரகத்தில் வனவிலங்குகளிடம் இருந்து பயிரை காக்க சூரியமின்வேலி அமைப்பு
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இதில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து தென்னை, வாழை, கரும்பு, மக்காச்சோளம், போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. யானைகள் விவசாய நிலத்தில் புகுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையால் தாளவாடி அருகே உள்ள மல்குத்திபுரம் முதல் வீரப்பன்தொட்டி வரை 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகழிகள் அமைக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து அந்த அகழியை ஒட்டி இரியபுரம் முதல் மல்குத்திபுரம் வரை 4 கி.மீ. தூரத்துக்கு சூரிய மின்வேலி அமைக்க முடிவு செய்தனர். இதையடுத்து ரூ.16 லட்சம் செலவில் வனவிலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுவதை தடுக்கும் வகையில் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது. இதனால் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவது வெகுவாக குறையும்' என்றனர்.
நிகழ்ச்சியில் தாளவாடி வனச்சரகர் சதீஷ் மற்றும் வனத்துறையினர் என விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.