விளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் வனவிலங்குகள்
விளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் வனவிலங்குகள்
தளி
உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் விளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் மனு கொடுத்தனர்.
வனவிலங்குகள்
திருப்பூர் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. அவற்றுக்கு உணவு இருப்பிடம் அளித்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடைக்கலம் கொடுத்து வருகிறது.
ஆனால் கோடை காலத்தில் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கி சீரழிந்து விடுகிறது. அத்துடன் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் நீர்வரத்தை இழந்து விடுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் உணவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அதைத்தொடர்ந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பசி தாகத்தோடு அடிவாரப்பகுதியை நோக்கி வந்து விடுகிறது.
அடிவாரப்பகுதியில் தஞ்சம்
அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது. இதையடுத்து யானை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் தஞ்சம் அடைந்தது. பின்னர் ஏற்பட்ட மழைப்பொழிவுக்கு பின்பு யானைகள் வனப்பகுதிக்குள் திரும்பிச்சென்று விட்டது.
ஆனால் காட்டுப்பன்றி மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப் பகுதியில் உள்ள சூழலுக்கு ஏற்ப வாழ்வதற்கு பழகிக்கொண்டதால் வனப்பகுதிக்குள் திரும்பிச்செல்லவில்லை. அடிவாரப்பகுதியில் உள்ள விவசாய பூமிகள், பள்ளம் படுகைகள், நீர்நிலைகளை வாழ்விடமாக மாற்றிக்கொண்டது. புதிதாக பிறந்த குட்டிகளுக்கு சமவெளி பாரப்பே வாழ்விடமாக மாறிப்போனதால் அவை வனப்பகுதிக்குள் திரும்பிச் செல்வதற்கு முயற்சிக்கவில்லை.
வனத்துறை அமைச்சரிடம் மனு
இதனால் அடிவாரப்பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் இனத்துடன் பல்கி பெருகி தனது வாழ்விடத்தை அமைத்துக் கொண்டு உள்ளது. அவற்றுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும் போது சாகுபடி பணிகளுக்கு இடையூறு செய்வதுடன் விவசாய பயிர்களையும் அழித்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அமராவதி பகுதிக்கு வருகை தந்தார். அப்போது விவசாயிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் வனவிலங்குகளால் விவசாயிகள் படும் இன்னல்கள் மற்றும் இழப்புகளை அமைச்சரிடம் எடுத்துக் கூறினார்கள். மேலும் வனஎல்லையை ஒட்டிய பகுதியில் சூரிய ஒளி மின்வேலி அமைத்து தருமாறும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இது குறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
----