காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம்
பூதப்பாண்டி அருகே கால்வாயில் தண்ணீர் எடுக்க சென்ற பெண்ணை காட்டுப்பன்றி தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே கால்வாயில் தண்ணீர் எடுக்க சென்ற பெண்ணை காட்டுப்பன்றி தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
செங்கல்சூளை தொழிலாளி
பூதப்பாண்டி அருகே உள்ள திடல் ரத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி அருள்செல்வி (வயது 49). இவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அருள்செல்வி தாடகைமலை அடிவாரத்தில் உள்ள மூக்குத்தி பகுதியில் ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது மாலை 3 மணியளவில் குடிநீர் எடுப்பதற்காக குடத்துடன் அருகில் உள்ள கால்வாய்க்கு சென்றார்.
காட்டுப்பன்றி தாக்கியது
கால்வாயில் அவர் தண்ணீர் எடுத்து கொண்டிருந்த போது ஒரு காட்டுப்பன்றி இவரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை பார்த்த அருள்செல்வி மிகுந்த அச்சமடைந்து தப்பி செல்ல முயன்றார். அதற்குள் வேகமாக வந்த காட்டுப்பன்றி அவரை முட்டி கீழே தள்ளி விட்டு வந்த வேகத்தில் ஓடி சென்றது. இதில் கீழே விழுந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் சத்தம் போடவே சகத்தொழிலாளர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்பினார்.
குமரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி கிராம மக்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, காட்டு விலங்குகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.