காட்டு பன்றி. குரங்குகளை சுட அனுமதிக்க வேண்டும்


காட்டு பன்றி. குரங்குகளை சுட அனுமதிக்க வேண்டும்
x

விளை பொருட்களை சேதப்படுத்தும் காட்டு பன்றி மற்றும் குரங்குகளை சுட அனுமதிக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட குடியாத்தம், கே.வி. குப்பம், பேர்ணாம்பட்டு தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் எம்.வெங்கடராமன் தலைமையில் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள், குறைகள் குறித்து பேசினர். அவர்கள் பேசியதாவது:-

பேரணாம்பட்டு, மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் கரும்புகளை திருப்பத்தூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும், யானைகள் மீண்டும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை விவசாயிகள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுவரை வழக்கு ரத்து செய்யப்படவில்லை.

சுட அனுமதிக்க வேண்டும்

வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தொடர்ந்து இதே போல் இருந்தால் விரைவில் முதல்-அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளி ஊராட்சியில் உள்ள மோல்டிங் தொழிற்சாலை உரிய அனுமதி இன்றி செயல்படுகிறது அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேரி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் காட்டுப்பன்றி மற்றும் குரங்குகள் விளை பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. காட்டுப்பன்றி மற்றும் குரங்குகளை சுட அனுமதி அளிக்கவேண்டும்.

குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் மீண்டும் கால்நடை சந்தை ஏற்படுத்த வேண்டும். ஏரி பாசன தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகல் பகுதியில் தனியார் மருத்துவமனையின் கழிவுகள் புதைக்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது.

தெரியப்படுத்த வேண்டும்

வேளாண்மைத் துறை சார்பில் என்னென்ன மானியங்கள் வழங்கப்படுகிறது என விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த கிராமத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். கால்நடை மருத்துவமனை வளாகம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படுவதை தடுக்க சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும்

மேல்ஆலத்தூர் ெரயில்வே பாலத்தின் கீழ் அடிக்கடி தண்ணீர் தேங்கி பள்ளங்களாக உள்ளன. அதை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

இதற்கு பதில் அளித்த கோட்டாட்சியர் வெங்கட்ராமன் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story