விளைநிலங்களில் காட்டுப்பன்றி- மான்கள் புகுந்து அட்டகாசம்


விளைநிலங்களில் காட்டுப்பன்றி- மான்கள் புகுந்து அட்டகாசம்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே விளைநிலங்களில் காட்டுப்பன்றி-மான்கள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் 30 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே விளைநிலங்களில் காட்டுப்பன்றி-மான்கள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் 30 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானது.

நெற்பயிர்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும்செவல் மாமன்னர் பூலித்தேவரின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி என்பவருக்கு சொந்தமாக மொட்டமலை அருகே உய்யாக்குளம் கண்மாய் பாசனம் பகுதியில் சுமார் 30 ஏக்கரில் நஞ்சை நிலம் உள்ளது. அதில் கடந்த புரட்டாசி மாதம் நெல் பயிரிட்டுள்ளனர்.

பின்னர் அறுவடைக்கு நெற்பயிர்கள் தயாரான நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெய்த மழையினால் அறுவடையில் தாமதம் ஏற்பட்டது. மீண்டும் வயல்வெளிகளில் தண்ணீர் வடிந்த பின்பு அறுவடைக்கான ஏற்பாடு செய்வதற்காக நேற்று முன்தினம் வயல் பகுதிக்கு கோமதி முத்துராணி துரைச்சியின் கணவர் பாண்டியராஜா சென்றார்.

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

அங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள், மான்கள் புகுந்து நெற்பயிர்களை தின்றும், உருண்டு விளையாடி நாசம் செய்ததும் தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி கோமதி முத்துராணி துரைச்சி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று, வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

மேலும் இதுபோன்று சேதங்கள் ஏற்படாத வகையில் வனவிலங்குகளை தகுந்த பாதுகாப்புடன் காட்டுப்பகுதிக்கு கொண்டு சேர்த்து விடுமாறும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story