வயலில் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்திய காட்டு பன்றிகள்
திருக்குறுங்குடியில், வயலில் புகுந்து நெற்பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தின. பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடியில், வயலில் புகுந்து நெற்பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தின. பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்பயிர்கள் சேதம்
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே படலையார்குளம் செவிட்டு மடை பாசன பகுதியில் நெல் பயிரிட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் காட்டு பன்றிகள் கூட்டம் நெல் வயல் விளைநிலங்களில் புகுந்து, 4 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிர்களை நாசம் செய்தது.
பயிர் செய்து 3 மாதமான நெல் பயிர்கள் தற்போது விளைச்சலுக்கு வரும் நிலையில் பன்றிகள் துவம்சம் செய்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பன்றிகள் அட்டகாசம் தொடர்கதையாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவைகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் கூறுகையில், "நான் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கி நெல் சாகுபடி செய்தேன். அறுவடைக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி விட்டன. இதனால் வாங்கிய கடனை எப்படி திரும்ப செலுத்துவது? என்று தெரியவில்லை. பெருகி வரும் வனவிலங்குகள் அட்டகாசத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்து வருகிறது" என்றார்.