முதுமலையில் பலியான காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி
முதுமலையில் பலியான காட்டுப் பன்றிகளை ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தாக்கியுள்ளது மருத்துவ ஆய்வக அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதுமலையில் பலியான காட்டுப் பன்றிகளை ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தாக்கியுள்ளது மருத்துவ ஆய்வக அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு காட்டுப் பன்றிகள் தொடர்ந்து பலியானது. இது தொடர்பாக முக்கிய உடற்பாகங்களை சேகரித்து கர்நாடகா வனத்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் காட்டுப்பன்றிகள் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, கார்குடி பகுதியில் காட்டுப் பன்றிகள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது.
இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் தலைமையிலான குழுவினர் மற்றும் வனத்துறையினர் காட்டுப்பன்றிகளின் உடல்களில் இருந்து முக்கிய பாகங்களை சேகரித்து உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தியன் கால்நடை ஆராய்ச்சி இன்ஸ்டியூட்டுக்கு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் முதுமலையில் உயிரிழந்த காட்டு பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீரோடைகளில் கண்காணிப்பு
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- முதுமலையில் உயிரிழந்த காட்டுப்பன்றிகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பன்றிகள் உயிரிழப்பு எதுவும் பதிவு ஆக வில்லை. இருப்பினும் தெப்பக்காடு, கார்குடி சரக வனப்பகுதியில் உள்ள நீரோடைகளின் கரையோரம் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வாறு தண்ணீர் குடிக்க வரும் பன்றிகள் நல்ல நிலையில் உள்ளதா அல்லது சோர்வாக இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு பன்றிகள் கொண்டு வர தடை
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பால் பன்றிகள் இறந்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கவும் காய்ச்சல் பரவல் தடுப்பு சங்கிலியை உடைக்கவும் மாவட்ட கால்நடை மருத்துவ துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி மசினகுடி பகுதியில் கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குனர் சிவ கிருஷ்ணன் தலைமையில் பன்றி பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு கால்நடை துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தியுள்ளார்.இதைத் தொடர்ந்து கால்நடை இணை இயக்குனர் பகவத்சிங் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பன்றிகள் இறந்த இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் அந்த பகுதி கால்நடை மருத்துவக்குழு சோதனை நடவடிக்கை மேற்கொண்டதில் எந்த பண்ணையிலும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் அறிகுறிகளோ இந்நோய் தொடர்பான இறப்புகளோ எதுவும் இல்லை.
கால்நடை மருத்துவக்குழு பன்றி வளர்ப்பு உரிமையாளர்களிடம் உயிரி பாதுகாப்பு முறைகளான பண்ணையை சுற்றிலும் வேலி அமைத்து காட்டுப்பன்றிகள் ஏதும் பண்ணையில் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கால்நடை மருத்துவக்குழு நாள்தோறும் பண்ணைகளை கண்காணித்து வருகின்றனர். பன்றி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் தங்கள் வளர்க்கும் பன்றிகளை இந்த நோயின் தாக்கம் குறையும் வரை விற்பனைக்காக வெளியில் எடுத்துச்செல்லக்கூடாது. மீறினால் அவர்கள் மீது உரிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் நீலகிரிக்கு பன்றிகள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நோயானது பன்றிகளை மட்டுமே தாக்கக்கூடியது. மற்ற விலங்குளுக்கோ மனிதர்களுக்கோ பரவாது, எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.