காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்
சீர்காழி பகுதியில் வாழை-மரவள்ளி கிழங்குகளை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சீர்காழி பகுதியில் வாழை-மரவள்ளி கிழங்குகளை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
அன்பழகன்(பொதுச்செயலாளர், டெல்டா பாசனதாரர் சங்கம்):- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கு ஈரப்பதம் 21 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
முருகன்:- மணல்மேடு பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்து உளுந்து, பயிறு, பருத்தி ஆகியவற்றை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குத்தாலம் கல்யாணம் (முன்னாள் எம்.எல்.ஏ.,):- குத்தாலம் தாலுகா திருவேள்வகுடி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கால்நடை ஆஸ்பத்திரி கட்ட வேண்டும்.
காட்டுப்பன்றிகள் தொல்லை
பண்டரிநாதன்:- சீர்காழி தாலுகா செம்பதனிருப்பு, அல்லிவிளாகம் பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துவிட்டது.
வாழை மரங்களை சேதப்படுத்துவதோடு, மரவள்ளி கிழங்குகளையும் தோண்டி சேதப்படுத்துகின்றன. இதை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ராஜசேகரன்:- இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சந்தையை உருவாக்கி தர வேண்டும்.
கூடுதல் விலை
வாணிதாசன்:- கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்காக செங்கரும்பு ஒன்றுக்கு ரூ.33 விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது ரூ.15 விலை நிர்ணயிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் விலைக்கு செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
சண்முகம் (காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர்):- தூர்வார வேண்டிய வாய்க்கால் குறித்து தெரிவித்தால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல் கொள்முதல் நிலையம்
மதுரநாயகம் (நுகர்பொருள் வாணிபக்கழக தர கட்டுப்பாட்டு ஆய்வாளர்):- எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமல் நெல் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
ஜனவரி முதல் வாரத்தில் 150 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.
சேகர்(வேளாண்மைத்துறை இணை இயக்குனர்):- உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.