காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார். தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார். தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
யானை தாக்கி விவசாயி படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மரக்கட்டா கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா (வயது 60). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் விளைந்த ராகி பயிர்களை அறுவடை செய்து களத்தில் வைத்திருந்தார். நேற்று காலை பசப்பா ராகி பயிர்களை பார்ப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காட்டு யானை அவரை விரட்டி சென்று தாக்கியது.
இதில் பசப்பா படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டினர். பின்னர் அவர்கள் பசப்பாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வனத்துறையினர் காயம்
இதுகுறித்து வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பசப்பாவை பார்த்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நேற்று முன்தினம் அஞ்செட்டி அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தில் காட்டு யானை தாக்கி செங்கொடி என்ற பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி பசப்பா படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோன்ற தொடர் சம்பவங்களால் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.