காட்டு யானைகள் முகாம்; பள்ளி மாணவர்கள் அச்சம்
கூடலூர் கோக்கால் மலையடிவாரத்தில் காட்டு யானைகள் முகாமிட்டது. இதனால் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவர்கள் அச்சம் அடைந்தனர்.
கூடலூர்,
கூடலூர் கோக்கால் மலையடிவாரத்தில் காட்டு யானைகள் முகாமிட்டது. இதனால் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவர்கள் அச்சம் அடைந்தனர்.
காட்டு யானைகள் முகாம்
கூடலூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். யானை தாக்கி உயிரிழப்பு சம்பவமும் நடந்து வருகிறது. இதை தவிர்க்க மாலை தொடங்கி காலை வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு தனியாக செல்லக்கூடாது.
மேலும் இரவில் இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் தோட்ட தொழிலாளர்கள் பணியாற்ற சம்பந்தப்பட்ட நிர்வாகம் அனுமதிக்கக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கூடலூர் 4-ம் நெம்பர் லாரஸ்டன் உள்பட பல கிராமங்களுக்கு செல்லும் சாலையான கோக்கால் மலையடிவாரத்தில் நேற்று மாலை 4 மணிக்கு காட்டு யானைகள் முகாமிட்டது.
மாணவர்கள் அச்சம்
இதற்கிடையே பள்ளிக்கூடங்கள் முடிந்து கிராமப்புற மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். இதேபோல் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு பொதுமக்கள் தங்களது கிராமங்களுக்கு சென்றனர். அப்போது அவர்கள் காட்டு யானைகள் கூட்டமாக நிற்பதை பார்த்து அச்சம் அடைந்தனர். கூட்டத்தில் ஒரு யானை பொதுமக்களை துரத்த முயன்றது. மேலும் அவர்கள் அப்பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அதன் பின்னர் வனத்துறையினர் பாதுகாப்பில் மாணவர்கள், பொதுமக்கள் தங்களது கிராமங்களுக்கு சென்றனர். இருப்பினும், இரவில் காட்டு யானைகள் அப்பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.