காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்


காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 18 May 2023 1:30 AM IST (Updated: 18 May 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்த பணியில் 278 வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்த பணியில் 278 வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கணக்கெடுக்கும் பணி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், காட்டெருமைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், செந்நாய்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பு மற்றும் பிந்தைய காலநிலையை கருத்தில் கொண்டு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். இதில் காட்டு யானைகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து வனக்கோட்டங்கள் மற்றும் புலிகள் காப்பக வனப்பகுதிகளில் காட்டு யானைகள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தமிழக வனப்பகுதிகளில் ஒருங்கிணைந்த காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதுமலை புலிகள் காப்பகத்தில் கள இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கணக்கெடுப்பு பணியில் 228 வன ஊழியர்கள், 50 தன்னார்வலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

கால் தடங்கள்

புலிக காப்பகத்தின் உள் மற்றும் வெளி மண்டல பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு முறை, பிளாக் கணக்கெடுப்பு முறை மற்றும் குளம், குட்டைகளில் கணக்கெடுப்பு முறை என 3 வகையில் யானைகள் கனக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல் கூடலூர், நீலகிரி வனக்கோட்டங்களிலும் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நேரில் காணுதல், எச்சம், கால் தடங்கள் மூலமும் யானைகள் கணக்கெடுக்கப்பட்டது. தொடர்ந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு துறை ரீதியாக பதிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story