சீகூர் வனப்பகுதியில் காட்டு யானை சாவு
மசினகுடி அருகே சீகூர் வனப்பகுதியில் காட்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், காட்டு யானை இறந்தது.
கூடலூர்
மசினகுடி அருகே சீகூர் வனப்பகுதியில் காட்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், காட்டு யானை இறந்தது.
வனத்துறையினர் ரோந்து
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு குடிநீர் மற்றும் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்தநிலையில் மசினகுடி அருகே சீகூர் பிரிவுக்குட்பட்ட ஆணைக்கட்டி தெற்கு காவல் பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 35 வயதான ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்தனர். அதன் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
யானைகள் மோதல்
இதைத்தொடர்ந்து வனச்சரகர் பாலாஜி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காட்டு யானைகளின் கால் தடங்கள் அப்பகுதி முழுவதும் தென்பட்டது. பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
காட்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காட்டு யானை படுகாயம் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் கூறும்போது, ஆண் யானைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பெண் யானையை அணுகுவதற்காக ஆண் யானைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் காட்டு யானைகளுக்கு இடையே வழக்கமாக மோதல் இருந்து வருவது இயல்பு. யானைகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஆண் காட்டு யானை இறந்துள்ளது என்றார். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.