பந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி
பந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக இறந்தது.
பந்தலூர்
பந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக இறந்தது.
காட்டு யானை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பிதிர்காடு காமராஜ்நகர் மாரியம்மன் கோவில் அருகே பாட்டவயல் செல்லும் சாலையோரத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் காட்டுயானை மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் (பொறுப்பு) அய்யனார், வனவர்கள் ஜார்ஜ் பிரவீன்சன், பெலிக்ஸ், வன காப்பாளர் மில்டன்பிரபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். அப்போது அந்த யானை 8 வயதுடைய ஆண் யானை என்பதும், தனியார் தோட்டத்தில் இருந்த பாக்கு மரங்களை வேரோடு சாய்த்து உள்ளதும் தெரிய வந்தது. அப்போது ஒருபாக்கு மரம் மின்கம்பியில் சாய்ந்து உள்ளது.
மின்சாரம் தாக்கியது
இதனால் யானையின் துதிக்கை மின்கம்பியில் சிக்கியதால் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை இறந்தது தெரியவந்தது. அதனைதொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக திட்டகள இயக்குனர் வெங்கடேஸ், கூடலூர் மாவட்ட வனஅலுவலர் (பொறுப்பு) வித்தியா, பந்தலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார் ஆகியோர் அங்கு வந்து யானையை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கால்நடை டாக்டர்கள் ராஜேஸ்குமார் (முதுமலை), லாவண்யா (நெலாக்கோட்டை), சரண்யா (எருமாடு) ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் யானையின் சில பாகங்கள் ஆய்வுக்கான எடுக்கப்பட்டன.
இதையடுத்து காட்டு யானையின் உடல் அதேப்பகுதியில் குழி ேதாண்டி புதைக்கப்பட்டது. காட்டு யானை புதைக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.