தமிழ்நாட்டில் காட்டு யானைகள் எண்ணிக்கை உயர்ந்தது: கணக்கெடுப்பு அறிக்கையை முதல்-அமைச்சர் வெளியிட்டார்
யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த அறிக்கையின்படி தமிழ்நாட்டில் காட்டு யானைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சென்னை,
கேரளா மற்றும் கர்நாடகா அரசின் வனத்துறை, டேராடூனில் உள்ள இந்திய வன விலங்குகள் நிறுவனம், மயிலாடுதுறை ஏ.என்.சி.கல்லூரி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் யானைகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசின் வனத்துறை சார்பில் கடந்த மே மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு அறிக்கையை (2023) சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாச ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெண் யானைகள் அதிகம்
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள யானைகள் திட்ட இயக்குநரகத்தின் பரிந்துரையின்படி, யானைகளின் எண்ணிக்கையை நேரடி மற்றும் மறைமுக முறைகளை பயன்படுத்தி கணக்கிடுவதையும், தமிழ்நாட்டின் 26 வனக்கோட்டங்களில் தொகுதி கணக்கிடுதல் முறை மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் நேரடியாக காணப்பட்ட யானைகளின் தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. யானைகளின் இனத்தொகை கட்டமைப்பினை ஆராய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டு நடைபெற்றது.
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2017-ம் ஆண்டில் 2,761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2,961 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் 4 பிற யானைகள் காப்பகங்களுடன் ஒப்பிடும்போது நீலகிரி கிழக்கு தொடர்ச்சிமலை யானைகள் காப்பகமானது அதிக எண்ணிக்கையில், அதாவது 2,477 யானைகளை கொண்டுள்ளது. இக்கணக்கெடுப்பின் மூலம் ஆண் யானையை விட பெண் யானை அதிகமாக (1:2.17 விகிதம்) உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1,105 யானைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் 1,855 யானைகளும் உள்ளன.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால்...
இந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில் பல்வேறு யானை சரகங்களில் 1,731 துறைப்பணியாளர் மற்றும் 368 தன்னார்வலர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 99 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 3,496 சதுர கி.மீ பரப்பளவிலான 690 பிளாக்குகளில் இக்கணக்கெடுப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வன உயிரின குற்றங்கள்
2021-22-ம் ஆண்டு வனத்துறை மானிய கோரிக்கையின்போது வன உயிரின குற்றங்களை கண்டறிந்து தடுக்க வனம் மற்றும் வன உயிரின குற்றங்களை தடுக்க பிரத்யேக பிரிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த பிரிவு வன உயிரின குற்றங்கள் குறித்த தகவல்களை சேகரித்தல், சட்டவிரோதமாக வன உயிரினங்கள் மற்றும் வன உயிரின பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்தல், உலகளாவிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாக கொண்டு செயல்பட தொடங்கியது.
190 குற்றங்கள் பதிவு
இந்த பிரிவின் தலைமையகம் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டு வனம் மற்றும் வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு இயக்குநரை தலைவராகவும், சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மண்டலங்களில் துணை இயக்குநர்கள் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் 118 முன்கள வனப்பணியாளர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
இந்த பிரிவின் மூலம் 190-க் கும் அதிகமான வன உயிரின குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யானைதந்தங்கள் மற்றும் யானை தந்தத்திலான பொருட்களை விற்பனை செய்தல், புலித்தோல் மற்றும் அதன் பாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோதமாக பாம்புகள், கிளிகள், கடல் சங்குகள், கடல் அட்டைகள் ஆகியவை வைத்திருந்த குற்றங்கள் என 50-க் கும் மேற்பட்ட வனக்குற்றங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து வன உயிரின பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை திறப்பு
இந்த பிரிவுக்கென பிரத்யேகமாக கட்டுப்பாட்டு அறை சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், இந்த பிரிவின் இலச்சினையையும் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.