குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்
பந்தலூர் அருகே குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை, தட்டாம்பாறை, செம்பக்கொல்லி போன்ற பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு மரங்கள் உள்ளன. இந்த தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் மூலைக்கடை அத்திசால் பகுதி குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அங்கு பலா மரங்களில் இருந்த பலா பழங்களை தின்றது. பின்னர் அங்கிருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் சென்றது. இதையடுத்து சோதனைச்சாவடி அருகே சாலையை காட்டு யானைகள் வழிமறித்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனத்துறையினர் கண்ணாணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மழவன் சேரம்பாடி பகுதியில் 2 காட்டு யானைகள் குடியிருப்புகளில் முகாமிட்டது. குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.