கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்


கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்
x

கூடலூர் அருகே கடையை உடைத்து காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே கடையை உடைத்து காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

கடையை உடைத்தது

கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வுட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜாபர், தி.மு.க.வை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 6 மணிக்கு அப்பகுதி மக்கள் வழக்கம் போல் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது ஜாபரின் மளிகை கடையை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளதை பார்த்தனர். தகவலறிந்த ஜாபர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அப்போது நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டமாக வந்து கடையின் ஷட்டரை உடைத்து, உள்ளே வைத்திருந்த மளிகை பொருட்களை தின்று விட்டு சென்றது தெரியவந்தது.

ஊருக்குள் புகுந்த யானை

சம்பவ இடத்தை உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் பார்வையிட்டார். அப்போது அவரிடம் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதேபோல் கூடலூர் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி அருகே நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டினர். தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தியபோது பலா மரங்கள் அதிகளவு காய்களுடன் இருப்பதை கண்டனர். அதை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு உத்தரவிட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதேபோல் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லீங்கரையில் இருந்து 4-ம் மைல் சாலையில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து நடந்து வந்தது. இதை கண்ட பொதுமக்கள் வீடுகளுக்குள் சென்று கதவுகளை பூட்டினர். மேலும் காட்டு யானை சாலையில் நடந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் தனியார் தேயிலை தோட்டம் வழியாக காட்டு யானை சென்ற பின்னர் போக்குவரத்து சீரானது.


Next Story