தோட்டத்தில் காட்டுயானைகள் முகாம்


தோட்டத்தில் காட்டுயானைகள் முகாம்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அங்கு பச்சை தேயிலை பறிக்க தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அங்கு பச்சை தேயிலை பறிக்க தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காட்டுயானைகள் கூட்டம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பலாப்பழ சீசன் நிலவும். இந்த சமயத்தில் பலாப்பழங்களை ருசிக்க சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம் பர்லியார், கே.என்.ஆர். நகர், மரப்பாலம் போன்ற பகுதிகளில் முகாமிடுவது வழக்கம்.

இதற்கிடையில் கடந்த 2 மாதங்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து உள்ளது. இதனால் வறட்சி நீங்கி வனப்பகுதி மற்றும் தோட்டங்களில் பசுமை திரும்பியுள்ளது. குறிப்பாக யானைகளுக்கு பிடித்தமான தீவனங்களான வாழை மற்றும் புற்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுகிறது.

வாழை மரங்களை ருசித்தன

இந்த நிலையில் அவற்றை ருசி பார்க்க சமவெளி பகுதியில் இருந்து 9 காட்டு யானைகள் நீண்ட நாட்கள் கழித்து குன்னூர் பகுதிக்கு படையெடுத்துள்ளன‌‌. நேற்று முன்தினம் அந்த யானை கூட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி தேயிலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உள்ள வாழை மரங்களை ருசி பார்த்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு மத்தியில் அந்த யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தொழிலாளர்களுக்கு உத்தரவு

ஆனால் மீண்டும் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் தொழிலாளர்கள் யாரும் தேயிலை பறிக்க செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் நுழையாமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story