காட்டு யானைகள் தொடர்ந்து உயிரிழப்பு:விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை-மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை
விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் சட்டப்படி குற்றவியல் தண்டனை வழங்கப்படும். எனவே மின்வேலி அமைக்க கூடாது என வலியுறுத்தி மின்வாரிய அதிகாரிகள், வனத்துறையினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கூடலூர்
விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் சட்டப்படி குற்றவியல் தண்டனை வழங்கப்படும். எனவே மின்வேலி அமைக்க கூடாது என வலியுறுத்தி மின்வாரிய அதிகாரிகள், வனத்துறையினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
காட்டு யானைகள் தொடர் உயிரிழப்பு
கோவை, தர்மபுரி உட்பட பல இடங்களில் மின்வேலியில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழந்தது. இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியிலும் காட்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதனால் காட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி அமைப்பதை தடுக்க மின்வாரிய துறையினர் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள வனம் மற்றும் மலை பிரதேசங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், சட்டவிரோதமாக மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதா என மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதேபோல் விவசாய நிலங்களை சுற்றிலும் மின் வேலி உள்ளதா என கண்காணித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான துண்டு பிரசுரங்களை மின்வாரிய அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
விழிப்புணர்வு
கூடலூர் கோட்ட மின்வாரியம் சார்பில் விவசாய நிலங்களில் மின் வேலி பொருத்துதல் கூடாது. அவ்வாறு அமைக்கப்பட்டு இருந்தால் மின்வாரியத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முகாம் கூடலூர் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கோட்ட செயற்பொறியாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வனச்சரகர்கள் ராஜேந்திரன், யுவராஜ், உதவி பொறியாளர்கள் சந்தோஷ் குமார், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமில் வனவிலங்குகளிடமிருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க மின்சார வேலை அமைப்பது இந்திய மின்சார சட்டம் 2003 பிரிவு 138 படி குற்றமாகும். மேலும் குற்றவியல் தண்டனை வழங்கப்படும் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதுகுறித்து கோட்ட செயற்பொறியாளர் சதீஷ்குமார் கூறியதாவது:-
தகவல் தெரிவிக்க வேண்டும்
கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதியில் மின்வாரிய உதவி பொறியாளர்கள், வனத்துறை அலுவலர்கள் அடங்கிய ஆய்வுக் குழு யானைகள் நடமாட்டம் மற்றும் வழித்தடங்கள் உள்ள இடங்களை கண்டறிந்து தாழ்வாக செல்லும் மின்பாதைகளை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், மரக்கிளைகளை வெட்டுதல் என 528 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விவசாய நிலங்களை சுற்றிலும் மின்சார வேலி அமைத்தால் குற்றவியல் தண்டனை வழங்கப்படும். எனவே விவசாயிகள் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் யாராவது மின் வேலி அமைத்திருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.