தண்டவாளங்களை கடந்து சென்ற காட்டு யானைகள்


தண்டவாளங்களை கடந்து சென்ற காட்டு யானைகள்
x

ஜோலார்பேட்டை அருகே ரெயில்வே தண்டவாளங்களை கடந்து செனற 2 காட்டு யானைகளும் வெங்காயப்பள்ளி பகுதியில் முகாமிட்டுள்ளன.

திருப்பத்தூர்

காட்டு யானைகள் முகாம்

கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த 19 நாட்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 யானைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர் குப்பத்தில் தண்ணீர்பந்தல் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. அன்று இரவு ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் உள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை முகாமிட்டிருந்தது.

நேற்றுமுன்தினம் அதிகாலை அங்கிருந்து குடியானகுப்பம் வழியாக சோலையூர், பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலம் சாலையை கடந்து, அவ்வழியாக செல்லும் தண்டவாளங்களை கடந்து சின்னக்கம்பியம்பட்டு, ரெட்டியூர் வழியாக வாணியம்பாடி திருப்பத்தூர் சாலையை கடந்து, சின்ன கவுண்டனூர் பகுதிக்கு சென்றது.

ஆக்ரோஷத்துடன் பிளிறியது

அன்று இரவு ஏலகிரி கிராமம் மயில் பாறை பகுதியில் முகாமிட்டிருந்தது. கிராம மக்கள் யானைகள் மீது கற்கள் வீசி விரட்ட முயன்றனர். இதனால் யானைகள் கடும் ஆக்ரோஷத்துடன் பிளிறியது. இதைக்கண்ட வனத்துறையினர் உடனடியாக கிராம மக்களை மைக் மூலம் எச்சரித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞர்களை எச்சரித்து விரட்டினர்.

தற்போது வி.எம்.வட்டம் பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று மாலை மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ் கிடிஜலா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு குழுவினர் யானை எந்த பக்கம் நோக்கி செல்கிறது என கண்காணித்து வருகின்றனர். மற்ற குழுவினர் யானை முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை பாதுகாப்பு இருக்கும் படி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தால் யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும். யானைக்கு தொந்தரவு செய்ததால் தான் அது காட்டிற்குள் செல்ல முடியாமல் ஏலகிரி மலையடிவாரத்தில் நோக்கி வந்தது. பொது மக்கள் யாரும் யானையை தொந்தரவு செய்யாமல் இருந்தால் வெங்காயபள்ளி, ஜலகாம்பாறை, ஜடையனூர் மிட்டூர் வழியாக ஆலங்காயம் காப்புக்காட்டு பகுதி வழியாக ஜம்னாமரத்தூர் வனப்பகுதிக்கு சென்று விடும் என தெரிவித்தனர்.

யானையை பின்தொடர்ந்து செல்பவர்களின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து வழக்கு தொடரப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்து உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் யானை முகாமிட்டுள்ள வெங்காயப்பள்ளி பகுதியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story