கூடலூர், கோத்தகிரியில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்- தொழிலாளர்கள் பீதி


கூடலூர், கோத்தகிரியில் வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர், கோத்தகிரியில் வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

கூடலூர் தாலுகா தேவாலா அருகே அட்டி பகுதியில் சம்பவத்தன்று இரவு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சி ஜூ, வேலு ஆகியோரது வீட்டின் மேற்கூரை மற்றும் சமையலறை பகுதியை உடைத்து சேதப்படுத்தியது. இந்த சமயத்தில் வீட்டில் இருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் பயத்தில் கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வந்து உடைமைகளை சேதப்படுத்துவதால் நஷ்டத்துக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ஆதிவாசியின் வீடு

இதேபோல் கோத்தகிரி அருகே ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சுண்டபட்டி பழங்குடியின ஆதிவாசி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் என்பவரது மகன் சந்திரன். கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் மற்றும் கூரைகள் திடீரென இடிந்து விழும் சத்தம் கேட்டு அலறியடித்து எழுந்து, வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது, காட்டு யானை ஒன்று வீட்டைத்தாக்கி சேதப்படுத்திக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அங்கிருந்து ஓடிச் சென்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். அவர்கள் தீப்பந்தங்களைக் காண்பித்து குடியிருப்புப் பகுதியில் இருந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் இது குறித்து கோத்தகிரி வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதே போல கடந்த 1-ந் தேதி காக்கா கூண்டு கிராமத்தைச் சேர்ந்த மருதாசலம் என்ற ஆதிவாசி தொழிலாளியின் வீட்டையும் உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதால் பழங்குடியின கிராம மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், காட்டுயானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story