மாமரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
ஆயக்குடி அருகே கோம்பைப்பட்டியில் தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள் மாமரங்களை சேதப்படுத்தியது.
யானைகள் அட்டகாசம்
பழனி அருகே கோம்பைபட்டியில் ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இங்கு கரும்பு, மா, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே கோம்பைப்பட்டி, ராமபட்டினம்புதூர் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மலைப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறி தோட்டங்களுக்குள் புகும் யானைகள் பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது.
அதன்படி கடந்த சில நாட்களாக ஒற்றையானை அட்டகாசம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோம்பைப்பட்டி மலையடிவாரத்தில் உள்ள துரைச்சாமி, பிரபு ஆகியோரது தோட்டத்தில் சோலார்வேலியை சேதப்படுத்தி காட்டுயானைகள் கூட்டமாக புகுந்தன. பின்னர் அங்குள்ள மாமரங்களை சேதப்படுத்தி சென்றது. காலையில் தோட்டத்துக்கு சென்ற விவசாயிகள் சோலார் வேலி, மரங்கள் ஒடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
உரிய இழப்பீடு
யானைகள் அட்டகாசம் குறித்து விவசாயி துரைச்சாமி கூறுகையில், கடந்த ஒரு மாதமாகவே காட்டுயானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இரவு மட்டுமின்றி பகலிலும் யானைகள் தோட்டத்தில் சுற்றி திரிகிறது. அதை வனப்பகுதிக்குள் விரட்டவும், சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறை போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.