வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்


வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x

கோத்தகிரி அருகே வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி சுற்றுவட்டார பழங்குடியின கிராம பகுதிகளில் பயிரிடப்பட்டு உள்ள பலா மரங்களில் சீசன் காரணமாக பலா பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. இதை திண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் பகுதியில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பழங்குடியினர் கிராமங்களான முடியூர், வக்கனாமரம் பகுதிகளில் 5 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளது. இந்த யானை கூட்டம் நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு வாகனத்தை சேதப்படுத்தி விட்டு சென்றது. பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் தொடர்ந்து உலா வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சமடைந்து வருகின்றனர். எனவே, குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் வருவதை தடுக்க அகழிகள் வெட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story