பள்ளிவாசலுக்குள் புகுந்த காட்டு யானைகள்
பள்ளிவாசலுக்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்,
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் அங்குள்ள வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. இதையடுத்து மேட்டுப்பாளையம், காரமடை வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையையொட்டி உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. குறிப்பாக மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் நடமாடி வருகின்றன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையில் உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பர்லியார் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குள் காட்டு யானைகள் புகுந்தன. இதனால் அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். சற்று நேரத்துக்கு பின்னர் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன. இந்த காட்சியை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.