2 ஆயிரம் வாழைகளை சூறையாடிய காட்டு யானைகள்


2 ஆயிரம் வாழைகளை சூறையாடிய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து 2 ஆயிரம் வாழைகளை காட்டு யானைகள் சூறையாடியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து 2 ஆயிரம் வாழைகளை காட்டு யானைகள் சூறையாடியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

2 ஆயிரம் வாழைகள்

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூடலூர் அருகே மாக்கமூலா பகுதியில் விளைநிலங்கள் உள்ளன. இங்கு வாழை மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதிக்கு காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து விவசாயிகள் பயிரிட்டு உள்ள வாழைகளை தின்று சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டம் மாக்கமூலா பகுதிக்குள் புகுந்தது. அப்பகுதியிள் உள்ள தோட்டங்களுக்குள் நுழைந்து சுமார் 2 ஆயிரம் வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. பின்னர் யானைகள் அங்கிருந்து சென்றன. இதனால் சக்திவேல் உள்பட பல விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது குறித்து கூடலூர் கோட்ட வன அலுவலர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

காட்டு யானைகள்

இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து தினமும் சில காட்டு யானைகள் வெளியேறி வாழைகளை சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக வன அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது, ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காட்டு யானைகள் தொடர்ந்து வந்து இடையூறு செய்கிறது.

எனவே, சேதம் அடைந்த வாழைகளை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மேலும், காட்டு யானைகள் மீண்டும் அப்பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story