பேரூராட்சி அலுவலகத்தில் பொருட்களை சூறையாடிய காட்டு யானைகள்


பேரூராட்சி அலுவலகத்தில் பொருட்களை சூறையாடிய காட்டு யானைகள்
x

கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி அலுவலக கதவுகளை உடைத்த காட்டு யானைகள் பொருட்களை சூறையாடியது. பள்ளி கட்டிடத்தையும் சேதப்படுத்தின.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி அலுவலக கதவுகளை உடைத்த காட்டு யானைகள் பொருட்களை சூறையாடியது. பள்ளி கட்டிடத்தையும் சேதப்படுத்தின.

பொருட்களை சூறையாடியது

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் பரவலாக காணப்படுகிறது. இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்களின் வீடுகள், பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பெண் தோட்ட தொழிலாளியை காட்டு யானை தாக்கி கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இந்தநிலையில் ஓவேலி பேரூராட்சி அலுவலகம் பார்வுட் பகுதியில் உள்ளது. இதன் அருகே நூலகம் மற்றும் தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதிக்கு வந்தது. தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் மற்றும் தொடக்கப்பள்ளி கட்டிடத்தை முற்றுகையிட்டது. பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் பொருட்கள் இருப்பு வைக்கக்கூடிய அறை கதவுகளை யானைகள் உடைத்து பொருட்களை சூறையாடியது.

கட்டிடம் சேதம்

இதேபோல் தொடக்கப்பள்ளி கட்டிட கதவையும் உடைத்தது. பின்னர் அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றது. காட்டு யானைகளின் தாக்குதலால் பேரூராட்சி அலுவலக பொருட்களும், பள்ளி கட்டிடமும் சேதமடைந்தது. பின்னர் அதிகாலையில் யானைகள் அங்கிருந்து சென்றது. நேற்று காலை வழக்கம்போல் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்வதற்காக வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

அப்போது காட்டு யானைகள் பேரூராட்சி அலுவலக அறை கதவுகளையும், பள்ளிக்கூடத்தையும் சேதப்படுத்தி இருப்பதை கண்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிதாஸ் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து சேதமடைந்த இடங்களை பார்வையிட்டனர். பின்னர் காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.


Next Story