வாகனங்களை வழிமறித்த காட்டுயானைகளால் பரபரப்பு
பந்தலூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டுயானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டுயானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே மூலக்கடை, செம்பக்கொல்லி, தட்டாம்பாறை, பாதிரிமூலா, கோட்டப்பாடி, கருத்தாடு உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை குடியிருப்புகளை சேதப்படுத்துவதோடு விவசாய பயிர்களையும் நாசம் செய்கின்றன.
இதனால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்களை துரத்தி தாக்க முயலும் சம்பவங்களும் நிகழ்கிறது. இதனால் அவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அய்யன்கொல்லி அருகே மூலக்கடை பகுதியில் 3 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து அய்யன்கொல்லியில் இருந்து எருமாடு செல்லும் சாலையில் உலா வந்தன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாகனங்களை வழிமறித்தன
அதன்பேரில் சேரம்பாடி உதவி வன பாதுகாவலர் சர்மிலி, வனவர் ஆனந்த், வனக்காப்பாளர் குணசேகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இதேபோன்று அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் கோட்டப்பாடி பகுதியில் வாகனங்களை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்ததும் பிதிர்காடு வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், ராமச்சந்திரன், வனக்காவலர் சுப்பிரமணி மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று காட்டுயானைகளை விரட்டியடித்தனர். காட்டுயானைகள் தொடர்ந்து ஊருக்குள் வருவதால், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.