வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்
பந்தலூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை பகுதியில் 2 காட்டு யானைகள் கூடலூரில் இருந்து நம்பியார்குன்னு சென்ற பஸ் மற்றும் பிற வாகனங்களை வழிமறித்தது. மேலும் சாலையில் நின்று பிளிறியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு உதவி வன பாதுகாவலர் கிருபாகரன் உத்தரவின்படி, வனகாவலர் சுப்பிரமணியம் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து யானைகளை விரட்ட முயன்றனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த யானைகள் வர்க்கீஸ் என்பவரது வீட்டின் இரும்பு நுழைவுவாயிலை உடைத்தது. பின்னர் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதேபோல் பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளது. சேரம்பாடி உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி, வனவர் ஆனந்த், தேவாலா வனச்சரகர் அய்யனார் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.