பள்ளியை சூறையாடிய காட்டு யானைகள்
கூடலூர் அருகே பள்ளியை காட்டு யானைகள் சூறையாடியதோடு, பேரூராட்சி அலுவலகத் தையும் சேதப்படுத்தி யதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே பள்ளியை காட்டு யானைகள் சூறையாடியதோடு, பேரூராட்சி அலுவலகத் தையும் சேதப்படுத்தி யதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பேரூராட்சி அலுவலகம்
கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் பொதுமக்கள், விவசாயிகளின் உடைமைகளை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. ஓவேலி பேரூராட்சி அலுவலகம், அரசு தொடக்க பள்ளி, நூலகம், தபால் நிலையம் ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் காட்டு யானைகள் வளாகத்துக்குள் புகுந்து, பேரூராட்சி அலுவலகத்தில் பொருட்கள் இருப்பு வைக்கும் அறைகளை உடைத்தது.மேலும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதிக்குள் புகுந்தது. தொடர்ந்து பேரூராட்சி அலுவலக பொருட்கள் இருப்பு வைக்கும் அறைகள், அரசு பள்ளி, நூலகம், தபால் நிலையத்துக்குள் புகுந்து 2-வது முறையாக சூறையாடியது. இதில் பள்ளி வகுப்பறை சுவர் இரண்டாக பிளந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
மாணவர்கள் பீதி
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அந்த அறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல் பேரூராட்சி அலுவலக அறைகளும் பலத்த சேதம் அடைந்தது. காட்டு யானைகளின் தொடர் தாக்குதலால் பொதுமக்கள் மட்டுமின்றி பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பீதி அடைந்து உள்ளனர். தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து சேதமடைந்த கட்டிடங்களை பார்வையிட்டனர்.தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் சித்ராதேவி, செயல் அலுவலர் ஹரிதாஸ், துணைத் தலைவர் சகாதேவன் மற்றும் கவுன்சிலர்கள், காட்டு யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதேபோல் தேவர்சோலையில் உள்ள ரேஷன் கடையை ஒரு காட்டு யானை முற்றுகையிட்டது. பின்னர் கடையின் கதவை உடைத்து அங்கிருந்த பொருட்களை தின்றுவிட்டு சென்றது.