உற்சாகமாக சுற்றி திரிந்த காட்டு யானைகள்
காவேரிப்பட்டணம்:-
பாரூர் பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் சாலையை கடந்து சென்ற போது காரை மிதித்து சேதப்படுத்தியது.
ஏரியில் குளித்தன
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிக்குள் நுழைந்தன.
மோட்டுப்பட்டி மலையடிவாரத்தில் இருந்த 2 காட்டுயானைகள், அகரம் மருதேரி ஏரியில் இறங்கி குளித்து விளையாடின. பின்னர், வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை, அங்கிருந்து தட்ரஅள்ளி பகுதிக்கு விரட்டினார்கள்.
அந்த நேரம் யானைகள், சப்பாணிப்பட்டி அருகே தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. முன்னதாக வனத்துறையினர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகன போக்குவரத்தை நிறுத்தவில்லை.
கார் சேதம்
இதனால் அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை யானை உரசியும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியது. இதில் காரின் டயர் வெடித்தது. மேலும் காரின் பக்கவாட்டு பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் அபயகுரல் எழுப்பியபடி காருக்குள்ளேயே அச்சத்துடன் பதுங்கிக்கொண்டனர். தொடர்ந்து யானைகள் பாலக்கோடு பகுதியில் உள்ள வனத்துக்குள் நுழைந்தன.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பாலக்கோடு வனச்சரகம் மற்றும் காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் மலையை ஒட்டியுள்ள பகுதிக்கும், காட்டிற்கும் செல்ல வேண்டாம்.
மேலும், யானைகள் நடமாட்டம் குறித்து தகவலறிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். மாறாக விரட்டுவது, கல்வீசுவது மற்றும் யானை அருகே சென்று செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றனர்.