காட்டு யானைகள் உலா; வாகனங்களை துரத்தியதால் பரபரப்பு
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் உலா வந்து வாகனங்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் தட்டப்பள்ளம் அருகே குட்டியுடன் 2 காட்டு யானைகள் சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகளில் சிலர், காட்டு யானைகள் நிற்பதை பொருட்படுத்தாமல் வாகனங்களை இயக்கி சென்றனர். இதனால் மிரண்டு போன யானை ஒன்று, தனது குட்டிக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வாகனங்களை துரத்தியது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தினர். இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ½ அரை மணி நேரத்திற்கு பின்னர் அந்த யானைகள் குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானதுடன், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.