குட்டிகளுடன் தோட்டங்களில் உலா வரும் காட்டுயானைகள்
பழனி அருகே குட்டிகளுடன் தோட்டங்களில் காட்டுயானைகள் உலா வருகின்றன. எனவே தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று, ஒலிப்பெருக்கி மூலம் விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பழ சாகுபடி
பழனியை அடுத்த ஆயக்குடி மேற்குத்தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இங்கு கொய்யா, மா, சப்போட்டா, நாவல் உள்ளிட்ட பழ சாகுபடி அதிக அளவில் நடக்கிறது.
மலைப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது தோட்ட பகுதிக்குள் வருவது வாடிக்கை. இவ்வாறு வரும்போது சோலார் வேலி மற்றும் பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன.
அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப்பாறை, கோம்பைபட்டி பகுதியில் ஒற்றை காட்டெருமை அட்டகாசம் செய்து வந்தது. அதாவது தோட்ட பகுதிக்குள் புகுந்து பயிர்களை அந்த காட்டெருமை நாசம் செய்தது. மேலும் தோட்ட பகுதியில் நின்ற விவசாயி ஒருவரை முட்டி தள்ளியது. எனவே தோட்ட பகுதிக்கு செல்லவே விவசாயிகள் அச்சம் அடைந்து வந்தனர்.
உலா வரும் யானைகள்
இந்நிலையில் தற்போது ஆயக்குடி சட்டப்பாறை பகுதியில் குட்டிகளுடன் காட்டுயானைகள் தோட்டங்களில் உலா வருவதை விவசாயிகள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வனச்சரகர் ராஜா, வனவர் அம்சகணபதி தலைமையிலான வனத்துறையினர் சட்டப்பாறை பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். அதில் 2 குட்டிகளுடன், 4 காட்டுயானைகள் அடிவார பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிவது கண்டறியப்பட்டது.
ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை
இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, மலையடிவார பகுதியில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் யானைகள் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளன. எனவே தோட்டத்தில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவற்றை விரட்ட வேண்டாம். வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மாலை நேரத்தில் தோட்டங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறோம். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் சிறப்பு வனக்குழு ஈடுபட்டு வருகிறது என்றனர்.