வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்-விவசாய பயிர்களை நாசம் செய்தன


வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்-விவசாய பயிர்களை நாசம் செய்தன
x

வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த 3 காட்டு யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்தன.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

3 காட்டு யானைகள் அட்டகாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கர்நாடக-மாநில எல்லை பகுதியில் கடந்த 3 மாதங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் இந்த காட்டு யானைகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக வனப்பகுதியான பதிமடுகு மற்றும் கட்டாயம்பேடு வனப்பகுதிக்கு வந்துள்ளன.

இதனிடையே நேற்று காலை கட்டாயம் பேடு ஊருக்குள் புகுந்த 3 காட்டு யானைகள் அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன.

குறிப்பாக கட்டாயம் பேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாழைமரக்கன்றுகளையும், தக்காளி செடிகள் மற்றும் முட்டைக்கோஸ்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்துள்ளன.

விவசாயிகள் கவலை

இதனிடையே காலையில் விவசாயி வெங்கடேசன் தோட்டத்திற்கு வந்தார். அங்கு யானைகள் தோட்டத்தை நாசம் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் நாசம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த 3 காட்டு யானைகளை வேறு பகுதிக்கு விரட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறை அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம் அதிகரித்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story