கூடலூரில் வீடுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூரில் வீடுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூர்
கூடலூரை கோழிப்பாலம் பள்ளிப்பாடி, சேப்பட்டி சுற்றுவட்ட பகுதிகளில் கடந்த 1 வாரத்திற்கு மேலாக 2 காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் காணப்படுகிறது. இதில் பள்ளிப்படி அம்பலக்காடு பகுதியில் வசிக்கும் சதாசிவம் என்பவரது வீட்டை நேற்று முன்தினம் இரவு வந்த 2 யானைகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளன. அப்போது சதாசிவத்தின் மனைவி ஆனந்தாயி (வயது 50) மகள் புவனேஸ்வரி (28) ஆகியோர் பின்புற வழியாக தப்பி வேறு வீட்டிற்கு ஓட முயன்றனர். இவர்களை யானையை விரட்டியதால் ஓடிய இருவரும் விழுந்து காயமடைந்துள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்குவந்து யானைகளை விரட்டி காயம் அடைந்தவர்களை கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் இப்பகுதியில் வசிக்கும் செல்லமுத்து மற்றும் அபுபக்கர் ஆகியோரது வீடுகளையும் சேதப்படுத்திய யானைகள் அரிசி உள்ளிட்ட தானியங்களை சாப்பிட்டுள்ளன. வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டும் யானைகள் மீண்டும் ஊருக்குள் வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.