கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் 2 குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானைகள்-வாகன ஓட்டிகள் அச்சம்
கோத்தகிரி
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் 2 குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
காட்டு யானைகள் முகாம்
கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை சமவெளிகளை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலை அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக செல்வதால் காட்டு யானைகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளில் நடமாடி வருவது வழக்கமாக உள்ளது.
மேலும் குஞ்சப்பனை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் காய்த்துள்ள பழங்களை திண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து இப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ள காட்டு யானைகள் மீண்டும் சமவெளிப் பகுதிக்கு செல்லாமல் இங்கேயே தொடர்ந்து முகாமிட்டுள்ளன. மேலும் இந்த யானைகள் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குஞ்சப்பனை, தட்டப்பள்ளம், முள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் உலா வந்த வண்ணம் உள்ளன.
2 குட்டிகளுடன்...
தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு கோத்தகிரி வழியாக சுற்றுலா வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை சுமார் 3 மணியளவில் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முள்ளூர் அருகே 2 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் திடீரென சாலையைக் கடக்க முயற்சித்தன. அப்போது அந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்ததுடன், சுற்றுலா வந்த இளைஞர்கள் சிலர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.
வாகன ஓட்டிகள் அச்சம்
கும்பலாக சாலையைக் கடந்த யானைகளைக் கண்டு அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களைத் திருப்பி அங்கிருந்து சென்றனர். மேலும் அங்கு நின்றுக் கொண்டிருந்த இளைஞர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானைகள் தனது குட்டிகளை கால்களுக்கு இடையே பாதுகாப்பாக அழைத்து சாலையைக் கடந்துச் சென்றன. அதற்கு பின்னர் அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. இந்தக் காட்சியை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.