பரவும் காட்டுத்தீ்; சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
வனப்பகுதியில் பரவும் காட்டுத்தீயால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று அனுமதி அளிக்கப்படவில்லை.
வத்திராயிருப்பு,
வனப்பகுதியில் பரவும் காட்டுத்தீயால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று அனுமதி அளிக்கப்படவில்லை.
சதுரகிரியில் நவராத்திரி விழா
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் பக்தர்கள், மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் நவராத்திரி விழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது.
சதுரகிரியில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. இதற்காக வருகிற 5-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விழா நாட்களில் பக்தர்கள் ஆனந்தவள்ளி அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்து வந்தனர்.
பக்தர்கள் செல்ல தடை
இந்தநிலையில் நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
அப்போது, காட்டுத்தீ காரணமாக பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் தங்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதற்கு சுந்தரமகாலிங்கம் கோவில் கிழக்கு பகுதியில் உள்ள சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவி எரிந்து வருவதால் பாதுகாப்பு கருதி அனுமதிக்க முடியாது என வனத்துறையினர் விளக்கம் அளித்தனர்.
இதனால் நீண்ட நேரத்திற்கு மேலாக காத்திருந்த பக்தர்கள், பின்னர் ஏமாற்றத்துடன் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.