வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி
கொடைக்கானல் வனப்பகுதியில், வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.
கொடைக்கானல் வனக்கோட்ட பகுதியில் புலிகள், காட்டெருமைகள், மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. வனத்துறை சார்பில், இங்குள்ள விலங்குகள் ஆண்டுதோறும் கணக்கெடுக்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் எதிரொலியாக, கடந்த 3 ஆண்டுகளாக வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியானது 6 நாட்கள் நடைபெறுகிறது.
கொடைக்கானல், மன்னவனூர், பெரும்பள்ளம் உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. பாம்பார்புரம் சோலை, குண்டன்சோலை, பாரிக்கோம்பை, பேரிஜம் கிழக்கு உள்ளிட்ட 21 வனப்பகுதிகளில், 21 குழுக்களாக பிரிந்து வனப்பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். வனவிலங்குகளை நேரடியாக காணுதல், வனவிலங்குகளின் எச்சங்கள், அவற்றின் கால் தடங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வன உயிரின கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த கணக்கெடுப்பின் முடிவில், வன உயிரினங்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படும் என வனத்துறையினர் கூறினர். கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல், வனத்துறையினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.