10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா?
பயன்பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்தும் நீடிக்கும் சர்ச்சையால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? என பொதுமக்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
இது குறித்து மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயம் தற்போது புழக்கத்தில்தான் உள்ளது. அதை வாங்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்த நாணயங்களை வாடிக்கையாளர்கள் கொண்டு வந்தால் அவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்த ரிசர்வ் வங்கியின் அதிகாரியும் 10 ரூபாய் நாணயங்களை பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். எனவே பொதுமக்கள் தங்களிடம் 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அவற்றை வங்கிகளில் கொண்டு சென்று மாற்றிக்கொள்ளலாம். எந்த வங்கிகளாவது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மண்டல அலுவலகங்களில் உடனடியாக புகார் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.