கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?
மடவாமேடு கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொள்ளிடம்:
மடவாமேடு கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மீன்பிடி தொழில்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மடவாமேடு கிராமம் உள்ளது. கடலோர மீனவ கிராமமான இங்கு 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். முழுக்க முழுக்க மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இங்கு பிடிக்கப்பட்டு வரும் மீன்கள் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கருவாடு
இங்கிருந்து பல வகையான மீன்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் இந்த பகுதியில் இருந்து கருவாடும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகின்றன.
உள்ளூர் பகுதிகளில் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் உணவுக்கு பயன்படுத்தப்பட முடியாத சிறு, சிறு வகையிலான நூற்றுக்கணக்கான வகை மீன்கள் காயவைத்து உலர வைக்கப்பட்டு கோழி தீவனத்துக்காக நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடல் அரிப்பு
மீன் மற்றும் கருவாடு விற்பனையில் சிறந்த மடவாமேடு கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கு கடல் சீற்றத்தால் அலைகள் எழும்பி கடல் நீர் கிராமத்துக்குள் புகுந்ததால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். கடல் அரிப்பு அதிகமாகி குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மடவாமேடு கிராமப்பகுதி கடலுக்குள் சென்று விட்டது. இதனால் இந்த கிராமத்தில் இருந்து கடல் அலை தொட்டுச் செல்லும் தூரம் வெறும் 50 மீட்டர் தூரமே உள்ளது.
கருங்கல் தடுப்புச்சுவர்
தொடர்ந்து கடல் அலைகள் ஆர்ப்பரித்து வரும்போதெல்லாம் மடவாமேடு கிராமத்தை நெருங்கி வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மடவாமேடு கிராமமே கடலுக்குள் சென்று விடும் அபாய நிலையில் உள்ளது.
எனவே மடவாமேடு கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்படாத வகையில் கருங்கற்களை கொட்டி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.