திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?


திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
x

வலுவிழந்த தரைப்பாலத்துக்கு மாற்றாக திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

அக்னி ஆறு

கறம்பக்குடி அருகே 5 கி.மீ. தொலைவில் திருமணஞ்சேரி கிராமம் உள்ளது. இங்கு 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசித்திபெற்ற சுகந்த பரிமளேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சொல்கின்றனர். மேலும் திருமணஞ்சேரியை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கறம்பக்குடியில் இருந்து திருமணஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்ல கறம்பக்குடி அக்னி ஆற்றை கடந்துதான் செல்லவேண்டும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி மக்கள் கறம்பக்குடிக்கு செல்ல அக்னி ஆற்றை கடந்துதான் வர வேண்டும். பஸ் போக்குவரத்து போன்றவை இல்லாத நிலையே இருந்தது. ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்ட காலங்களில் கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கிகிடக்கும் நிலை இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அனுபவித்து வந்தனர்.

ரூ.1 கோடி மதிப்பில்

இதையடுத்து கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணஞ்சேரி அக்னி ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடி மதிப்பில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்பெற்று வந்தனர். கறம்பக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணிக்கு அரசு பஸ் மற்றும் மினி பஸ்களும் இந்த வழி தடத்தில் இயக்கப்பட்டன. தரைப்பாலம் அமைக்கப்பட்ட அக்னி ஆற்றில் பெரிய அளவில் வெள்ளபெருக்கு ஏற்படாததால் போக்குவரத்துக்கு சிக்கல் இல்லாத நிலை இருந்தது. இதனால் பொது மக்கள் தரைப்பாலத்தை சிரமமின்றி பயன்படுத்தி வந்தனர்.

வலுவிழந்த தரைப்பாலம்

இந்நிலையில் பாலம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தற்போது தரைபாலம் வலுவிழந்த நிலையில் உள்ளது. பாலத்தின் தடுப்பு தூண்கள் பெயர்ந்து உள்ளன. கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் அக்னி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு இந்த தரைபாலம் முழ்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமபட்டனர். மேலும் இந்த தரைப்பாலத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தஞ்சாவூர் மாவட்ட எல்லை பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த தடுப்பணையில் தேக்கப்படும் தண்ணீர் தரைப்பாலம் வரை தேங்கி கிடக்கிறது. பாலத்தை சுற்றி ஆளுயரத்திற்கு புற்கள் மண்டி கிடக்கின்றன. இவை நீரோட்டத்திற்கு தடையாக உள்ளன. பெரும் வெள்ளபெருக்கு ஏற்படும்போது தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வாய்ப்பும் உள்ளது. இதனால் இப்பகுதி கிராமங்கள் துண்டிக்கபடும் நிலை உருவாகும். எனவே போக்குவரத்து அதிகரித்துவிட்ட சூழலில் திருமணஞ்சேரி சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன்கருதி திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பாலத்தில் வெடிப்புகள் உள்ளது

திருமணஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி தருமன் கூறுகையில், தரைப்பாலம் மிகவும் வலுவிழந்த நிலையில் உள்ளது. தடுப்பணை அமைக்கப்பட்டுள்தால் பாலத்தை சுற்றி தண்ணீர் தேங்கிய நிலையிலேயே உள்ளது. அதனால் உறுதி தன்மை பாதிக்கப்பட்டு உள்ளது. பாலத்தில் அங்காங்கே வெடிப்புகளும் உள்ளன. கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின்போது பாலத்தை முழ்கடித்து தண்ணீர் சென்றதால் 3 நாட்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். எனவே உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரைப்பாலம் சேதமானால் விவசாயம் பாதிக்கும்

மஞ்சுவிடுதியை சேர்ந்த சின்னையா கூறுகையில், இப்பகுதியில் விவசாயமே பிரதானம். பெரும் மழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் சேதம் அடைந்தால் எங்கள் பகுதி விவசாயம் பாதிக்கபடும் நிலை உள்ளது. தரைப்பாலத்துக்கு அருகே மணல் திருட்டால் தரைப்பாலத்தின் தூண்கள் வலு விழுந்து உள்ளன. இதனால் அச்சத்துடனே மக்கள் பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே திருமணஞ்சேரி தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றுவது அவசிய தேவையாக உள்ளது என்றார்.

அச்சத்துடனே பயணிக்கும் பொதுமக்கள்

கறம்பக்குடியை சேர்ந்த சரவணன் கூறுகையில், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருமணஞ்சேரி கோவிலுக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தமிழகத்தின் பிரதான கோவில்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு செல்லும் சாலை மிக மோசமாக உள்ளது. தரைப்பாலமும் வலுவிழந்த நிலையில் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த தரைப்பாலத்தில் அச்சத்துடனே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே திருமணஞ்சேரி அக்னி ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story