கோட்டூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?


கோட்டூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?
x

கோட்டூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?

திருவாரூர்

சேதமடைந்த கட்டிடத்திற்கு பதிலாக கோட்டூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாடகை கட்டிடத்தில்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் வட்டார கல்வி அலுவலகம் மாவட்டக்கல்வி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோட்டூர் வட்டார கல்வி அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் 2, அலுவலக கண்காணிப்பாளர் 1, அலுவலக உதவியாளர்கள் 2, இளநிலை உதவியாளர்கள் 3, பதிவு எழுத்தர்கள் 2, கணினி இயக்குனர் 1 ஆகிய 11 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் 7 பேர் பெண்கள் ஆவர்.

மாதாந்திர கூட்டம்

கோட்டூர் வட்டாரத்தில் 72 தொடக்கப்பள்ளிகளும், 28 நடுநிலைப்பள்ளிகளும், 4 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்படுகிறது. இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதிவேடு பராமரிப்பு, பணப்பரிமாற்றம், பள்ளி குழந்தைகளுக்கு இலவச நலத்திட்ட உதவிகள், புத்தகங்கள் குறிப்பேடுகள், பள்ளிகளுக்கு தேவையான உதவிகள் இந்த அலுவலகம் மூலமாக தான் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாதாந்திர கூட்டம் நடைபெறுகிறது. வட்டார கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி மேற்பார்வையாளர்கள் இணைந்து பள்ளி சார்ந்த கற்றல், கற்பித்தல் முறை செயல்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட கல்வித்துறையில் மிக முக்கியமாக செயல்படக்கூடிய அலுவலக கட்டிடம் ேசதமடைந்துள்ளது. மேலும் கட்டிடத்தின் மேல் செடி, கொடிகள் மண்டிய நிலையில் பாழடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

மழைக்காலங்களில் மழை நீர் புகுந்து அலுவலக கோப்புகளும், பள்ளி தளவாட சாமான்களும் வீணாகிறது. இங்கு பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கும், வந்து செல்லக்கூடிய ஆசிரியர்களுக்கும் கழிவறை வசதி மற்றும் போதுமான அலுவலக இட வசதி இல்லாததால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கோட்டூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோட்டூர் பள்ளிவர்த்தியை சேர்ந்த ஜெயராமன் கூறுகையில்,

கோட்டூர் வட்டார கல்வி அலுவலகம் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தால் இங்கு வருபவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சம் உள்ளது. எனவே சேதமடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றார்.


Next Story