புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா?


புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா?
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த தொட்டியை அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

தில்லைவிளாகம்:

சேதமடைந்த தொட்டியை அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு பகுதியில் அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீரத்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் உள்ள சிவன் கோவிலில் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வீரன்வயல், வடக்கு வெள்ளாதிக்காடு, ஜாம்புவானோடை வடகாடு, சிவன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் வந்த பிறகு வீரன் வயல், வடக்கு வெள்ளாதிகாடு பகுதிகளுக்கு புதிய நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு தனியாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள ஜாம்புவானோடை வடகாடு, சிவன் கோவில் தெரு, பள்ளிக்கூட தெரு போன்ற பகுதிகளுக்கு இந்த தொட்டியின் மூலமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை

இந்த நிலையில் மிகவும் பழமையான குறைந்த கொள்ளளவை கொண்ட இந்த நீர்த்தேக்க தொட்டியின் மேல்புறத்தில் உள்ள சிலாப்புகள் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பில்லர்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதன் கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் உள்ளிருக்கும் இரும்பு கம்பிகளும் துருப்பிடித்து உள்ளது. இந்த நீர்த்தேக்கதொட்டி வேதாரண்யம் சாலை வடகாடு பகுதி பஸ் நிலையம் அருகில் இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வழியாக அதிக அளவில் சென்று வருகின்றனர்.

எனவே விபத்துகள் ஏதும் நடக்கும் முன்னர் சேதமடைந்த இந்த தொட்டியை அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாக இப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த இந்த தொட்டியை அகற்றிவிட்டு இந்த இடத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story