புதிய ரேஷன் கடை கட்டித்தரப்படுமா?
புதிய ரேஷன் கடை கட்டித்தரப்படுமா?
தொக்காலிக்காடு ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
பொருட்கள் சேதம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொக்காலிக்காடு ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடையில் 460 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டதால் கடந்த ஆண்டு பெய்த மழையில் கட்டிடத்தின் உள்ளே தண்ணீர் புகுந்து உள்ளே இருந்த அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்கள் அனைத்து சேதமடைந்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து ரேஷன் கடை கட்டிடத்தின் மேலே ஆஸ்பெட்டாஸ் (ஷீட்) கொட்டகை அமைத்துள்ளனர்.
புதிய ரேஷன் கடை
தற்போது இந்த கொட்டகையில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் பொருட்கள் வாங்க வருபவர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே தமிழக அரசும், சம்பந்தப்பட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதே இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும். குறிப்பாக செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டும் தான் இந்த ரேஷன் கடை இயங்குகிறது. இதனால் மற்ற 5 நாட்களும் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே வாரத்திற்கு 6 நாட்கள் தொடர்ந்து ரேஷன் கடை இயங்க நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.