புதுக்கோட்டையில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படுமா?


புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக விளைச்சல் இருந்தும் வீணாகும் பூக்களை தவிர்க்க வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

பூக்கள் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. நெல், கரும்பு, வாழை சாகுபடி, சிறுதானிய பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள், முந்திரி, பலா உள்ளிட்டவை விளைச்சல் அதிகமாக உள்ளன. இதேபோல் பூக்கள் சாகுபடியும் அதிகமாக காணப்படுகிறது.

மாவட்டத்தில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, கீரமங்கலம், புல்லான்விடுதி, மேற்பனைக்காடு, பனங்குளம், சேந்தன்குடி, குலமங்கலம், மறமடக்கி உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, காட்டு மல்லி, பிச்சி, அரளி, ரோஜா, செண்டி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள் அதிக விளைச்சல் காணப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பூக்கள் விளைச்சல் சராசரியாக உள்ளன.

வீணாகும் பூக்கள்

கீரமங்கலத்தில் பெரிய பூ மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து தான் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு பூக்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து பூக்களை வாங்கி செல்வது உண்டு. மேலும், பஸ்கள், வாகனங்களிலும் பக்கத்து மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிலையில் பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ள காலங்களில் பூக்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் பல இடங்களில் பூக்களை பறிக்காமலேயே செடியிலேயே விட்டுவிடுவது உண்டு. அப்படி பறித்து விற்பனைக்காக கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டாலும் போதுமான விலை கிடைக்காமல் குப்பைகளில் கொட்டப்படுவதையும் காணமுடியும்.

வாசனை திரவிய தொழிற்சாலை

ஆண்டுதோறும் பூக்கள் வீணாகும் பிரச்சினை நீடித்து தான் வருகிறது. இதனால் பூக்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டமடைகின்றனர். கமிஷன் மண்டிகளிலும் பூக்களை அதிகம் ஏலம் எடுப்பதில்லை. இதனால் வீணாகும் பூக்களை சரி செய்ய இப்பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகள், வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

இவ்வாறு அமைத்தால் அத்தொழிற்சாலைக்கு தேவையான பூக்களை அளிப்பதோடு, கூடுதலாக விவசாயிகளும் பூக்கள் உற்பத்தியில் ஈடுபடுவார்கள். இதனால் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படுமா? என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர். அதே நேரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசியல் கட்சியினரும் தேர்தல் நேரங்களில் வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால் இந்த வாக்குறுதி வெறும் அறிவிப்போடு நிற்கிறது என்று விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

முகூர்த்த தினங்கள்

இதுகுறித்து கொத்தமங்கலம் சுண்டாங்கி மாநகரை சேர்ந்த மலர் விவசாயி தமிழரசன் கூறுகையில், ''எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டி மல்லி, முல்லை, காட்டுமல்லி போன்ற மலர் சாகுபடி பணிகளை செய்து வருகிறோம். ஆனால் முகூர்த்த தினங்கள் மற்றும் ஒரு சில விசேஷ நாட்களில் மட்டும் தான் அதுவும் ஓரளவுக்கு மட்டுமே மலர்கள் விற்பனை ஆகும். சில நாட்களில் மலர்களை பறிக்க ஆவதற்கான கூலிக்கு கூட கட்டுப்படி ஆவதில்லை. இப்பகுதிகளில் நறுமண தொழிற்சாலை அமைத்து கொடுத்தால்மலர்களுக்கு விலை உயர்வு மற்றும் நிரந்தர தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது'' என்றார்.

மலர் சந்தை

வடகாடு தெற்குப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராசு கூறுகையில், ''இப்பகுதி விவசாயிகளது வாழ்கையில் துயர் துடைக்கும் வகையில் ஒரு மிகப்பெரிய மலர் சந்தை மற்றும் வாசனை திரவியம் தொழிற்சாலை போன்றவைகளை அரசு அமைத்து கொடுக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் ஏழை, எளிய விவசாய குடும்பத்தினர் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் அதிகப்படியான விவசாயிகள் அதிகளவில் மலர் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும்'' என்றார்.

குப்பைக்கு போகும் சம்பங்கி பூக்கள்

கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக திருவிழாக்கள், சுபமுகூர்த்த தினங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் சம்பங்கி பூக்கள் டன் கணக்கில் மீதமாகி குப்பைக்கு சென்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுத பூஜை நாளில் மட்டும் சம்பங்கி பூக்கள் அதிகளவில் விற்பனையானது. அதன் பிறகு சம்பங்கி பூக்கள் மூட்டை மூட்டையாக கட்டி சுமார் 2 டன் வரை குப்பைக்கு சென்றது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.


Next Story